ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் இடையே விசேட சந்திப்பு – இருதரப்பு ஒத்துழைப்புகள் தொடர்பிலும் இணக்கப்பாடு!

Wednesday, September 22nd, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் (Egils Levits) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரினது அரச தலைவர்கள் மாநாட்டுக்கு மத்தியில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருபத்து ஐந்து வருடகால தூதரகத் தொடர்புகளைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்காக, பலமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பது, இரு அரச தலைவர்களதும் கருத்தாக அமைந்திருந்தது.

அத்துடன் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பிலும், இரு நாடுகளினதும் அரச தலைவர்கள் அவதானம் செலுத்தியதோடு, தொற்றுப்பரவல் நீங்கியவுடன், இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும், கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில், இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை அதிகரித்துக்கொள்வது தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அமைப்பு மாற்றம்பெற வேண்டும் என்பதோடு, ஆசியா, தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்க வலய நாடுகளுக்கு அதிகப்படியான அங்கத்துவம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், இரு நாடுகளினதும் அரச தலைவர்களினது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: