ஜனாதிபதி ஆர்வம் : சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் அர்ப்பணிப்பு – தடுப்பூசியில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக சாதனைப் புரிந்தது இலங்கை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Thursday, September 16th, 2021

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நாடுகள் வரிசையில் இலங்கை தற்போது 5 ஆவது நாடாக இடம் பிடித்துள்ளது.

இது இலங்கைக்கு பாரிய வெற்றியாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான நாடுகளின் பட்டியலில் சிறிய வறிய நாடுகள் தவிர்ந்த அமெரிக்கா ஜப்பான் இத்தாலி மலேசியா போன்ற நாடுகள் முக்கியமானவையாகும். இவற்றில் பெரும்பாலானவை G7 அமைப்பின் பிராந்தியத்திற்கு உட்பட்ட நாடுகளாவதுடன், இவற்றில் 4 நாடுகள் தடுப்பூசி மருந்துவகைளை தயாரிக்கும் நாடுகளாகும்.

இது தொடர்பில் ஜனாதிபதி காட்டிய ஆர்வமும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் அர்ப்பணிப்புமே இந்த நாட்டில் இந்த அடைவைப் பெறுவதற்கு காரணமாக அமைந்து இருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் இலங்கையின் இரு இடங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இவ்வாறு கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்குள் செல்ல இனி அனுமதி இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்று தடுப்பு தொடர்பான அந்தந்த மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, கோவிட் தடுப்பூசி அட்டை இல்லாமல் குறித்த இரு நகரங்களுக்குள் நுழைய முயன்ற 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

மேலும், இவ்வாறானவர்கள் குறித்த இரு நகரங்களுக்குள்ளும் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு பண்டாரவளை மற்றும் மன்னாரின் நுழைவு இடங்களில் சாலைத் தடைகள் செயல்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: