ஜனாதிபதியின் வரலாற்றுப் பொதுமன்னிப்பு!

Tuesday, May 24th, 2016

யுவதியொருவரை கொடூரமாக படுகொலை செய்த குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

கடந்த வெசாக் தினத்தை முன்னிட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் பலருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் மரணதண்டனை ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டிருந்தது.

இதன் போது கடந்த 2005ஆம் ஆண்டு இராஜகிரிய ரோயல் பார்க் மாடிக்குடியிருப்பின் படிக்கட்டில் வைத்து இவோன் ஜோன்சன் என்ற யுவதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் அவரது காதலரான ஜுட் சர்மந்த என்பவர் கைது செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தால் பன்னிரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த தீர்ப்புக்கு எதிராக அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் போது வழக்கு விசாரணை முடிவில் ஜுட் சர்மந்தவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் உச்சநீதிமன்றத்தினால் வழக்கொன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முதலாவது மற்றும் ஒரே சம்பவம் இதுவாகும்.

இந்நிலையில் அண்மையில் வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ஜுட் சர்மந்தவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: