சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகளுக்கு நடவடிக்கை –  மஹிந்த தேசப்பிரிய!

Monday, February 13th, 2017

 

சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தள்ளதாவது –

கடந்த பொதுத் தேர்தலின் போது போட்டியிட்டு இதுவரையில் சொத்து விபரங்களை வெளிப்படுத்தாத 300 அரசியல்வாதிகள் தொடர்பிலான விபரங்கள் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் அரசியல்வாதியொருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அடுத்த தேர்தல்களில் போட்டியிட முடியாது.

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைடந்த முன்னாள் பிரதேச சபைத் தலைவர்கள், முன்னாள் மாநகர மேயர்கள், முன்னாள் நகரசபைத் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் உள்ளடங்குகின்றனர். பட்டியலிடப்பட்ட 300 அரசியல்வாதிகளைத் தவிர்ந்த கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஏனையவர்கள் சொத்து விபரங்களை ஒப்படைத்துள்ளனர்.

இதன்படி குறித்த அரசியல்வாதிகள் 300 பேருக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு சடட நடவடிக்கை எடுக்க உள்ளது.

அரசியல் கட்சிகளின் அதிகாரிகளுக்கும் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சொத்து விபரங்களை அறிவிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னதாக சொத்து விபரங்களை வெளியிடத் தவறும் அரசியல் கட்சிகளின் அதிகாரிகள் தொடர்பிலான தகவல்களும் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மஹிந்த-தேசப்பிரிய

Related posts: