சைலன்சரை மாற்றியதால் 50,000 ரூபா தண்டம்!

Wednesday, August 1st, 2018

மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்றவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது யாழ்ப்பாணம் நீதிமன்றம்.

யாழ் நகரில் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த இருவரை பின் தொடர்ந்த பொலிஸார் அவர்களது வீடுவரை சென்று விதிமீறல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

வீதியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றபோது சாரதி அனுமதிப்பத்திரமில்லை, வரி அனுமதிப்பத்திரமில்லை, காப்புறுதிப் பத்திரமில்லை, செலுத்திச் சென்றவரும் பின்னால் அமர்ந்திருந்து பயணித்தவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு உரிய சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்றில் மாவட்ட நீதிபதியும் மேலதிக நீதிவானுமான வி.இராமகமலன் முன்னிலையில் வழக்கு நேற்று அழைக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர் மன்றில் தோன்றினார்.

குற்றங்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மோட்டார் சைக்கிளுக்குரிய சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் மன்றால் விதிக்கப்பட்டது. சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமைக்கு 6 ஆயிரம் தண்டம் உட்பட ஏனைய குற்றங்களுக்காக 23 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

மொத்தமாக விதிக்கப்பட்ட 73 ஆயிரம் தண்டப் பணத்தையும் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டுமென்று தண்டனை பெற்றவர் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதைப் பரிசீலித்த மேலதிக நீதிவான் தண்டப்பணம் செலுத்த தவணை வழங்கியதுடன் தண்டனை பெற்றவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

Related posts: