சைபர் தாக்குதல்: உலகின் 99 நாடுகளில்கணினிகள் முடக்கப்பட்டு கப்பம் கோரப்பட்டது!
Sunday, May 14th, 2017இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் தைவான் உள்ளிட்ட 99 நாடுகளில் சுமார் 45,000 சைபர் தாக்குதல்கள் நடந்திருப்பதாக கேஸ்பர்ஸ்கை ஆய்வக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சைபர் தாக்குதல்களால் அரச சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.குறிப்பாக பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளைத் திருப்பி அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆலோசனை நேரத்தையும் இரத்து செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகினர்.
ரஷ்யாவும் அதிகளவிலான இணைய தாக்குதல்களை கண்டுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன. ஜெர்மனியில் ஓர் உள்ளூர் ரயில்வே பயணச்சீட்டு இயந்திரம் உட்பட பாதிப்படைந்த கணினிகளின் புகைப்படங்களையும் இத்தாலியில் ஓர் பல்கலைக்கழக கணினி ஆய்வகத்தின் படத்தையும் பொதுமக்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். ஸ்பெயினிலும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட நிறைய நிறுவனங்கள் இந்த இணைய தாக்குதலால் பாதிப்படைந்துள்ளன.
இந்த தாக்குதலுக்கான சைபர் ஆயுதங்கள், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த கருவிகளைக் கொண்டு உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் மீது இணையத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குட்பட்ட கணினிகள் ஒரு ப்ரோகிராமால் தற்காலிகமாக முடக்கப்பட்டு 300 டொலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன. ரான்சம்வேர் தாக்குதல் எனப்படும் பிணைத்தொகை கேட்கும் இந்த மல்வெயார், இமெயில்கள் மூலம் அதிவேகமாகப் பரவியுள்ளன.
மல்வெயாரின் செயற்பாடு பரவத்தொடங்கிய சில மணி நேரத்திற்குள் உலகம் முழுவதிலும் இருந்து 75,000 தாக்குதல்கள் வரை கண்டறியப்பட்டதாக இணைய பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் கூறியுள்ளது. 24 மணி நேரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக மல்வெயார்டெக் டிராக்கர் கண்டறிந்துள்ளது.இந்த மிகப்பெரிய தாக்குதலானது, இணைய வளங்கள் விவகாரத்தில் அமெரிக்காவின் தவறான அணுகுமுறையை பிரதிபலிப்பதாக சில சைபர் பாதுகாப்பு வல்லுனர்களும் தனியுரிமை ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|