சேதன விவசாயத்துக்கு மாறும் கடுமையான தீர்மானம் முழு எதிர்காலச் சந்ததியினருக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, November 3rd, 2021

பசுமை விவசாயக் கைத்தொழிலை நோக்கமாகக் கொண்டு சேதன விவசாயத்துக்கு மாறும் கடுமையான தீர்மானம் முழு எதிர்காலச் சந்ததியினருக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஐந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது –

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியானது, எமது நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்துக்குள் அதிசிறந்த வெற்றிகளைக் குவித்துக்கொண்டு, இன்று தனது ஐந்தாவது ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது.

அதற்காகத் தலைமைத்துவத்தை வழங்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கும், அதேபோன்று கட்சியின் அனைத்து அதிகாரிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“காலத்தின் தேவை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ளச் செய்யும் நோக்கத்திலேயே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்பட்டது. அந்த சந்தோஷம், இன்று கட்சிக்கும் எம் அனைவருக்கும் கிடைத்திருக்கின்றது.

புறஜாதி சக்திகள் இணைந்து, 2015ஆம் ஆண்டில் தேசியவாத ஆட்சியொன்றை இந்நாட்டுக்கு இல்லாமல் செய்தன.  “நல்லாட்சிக்காக முன்நிற்பதாக மக்களுக்குக் கூறிய அரசாங்கம், நாட்டின் இருப்புக்கு அடிப்படையாக அமையக்கூடிய தேசிய பாதுகாப்பைத் திட்டமிட்டு ஒழித்துக்கட்டியது. புலனாய்வுத் துறையை செயலிழக்கச் செய்தனர்.

நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த இராணுவ வீரர்களை சர்வதேசத்தின் முன் காட்டிக்கொடுத்தனர். இராணுவ வீரர்கள் பலரை சிறையில் அடைத்தனர். சிலருக்கு மரண தண்டனை வழங்கியதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இந்த நாசகரமான அதிகாரத்துக்கு எதிராக குரல் எழுப்பிய பௌத்த தேரர்கள் உள்ளிட்ட தேசியவாதிகளைச் சிறையில் அடைத்தனர். அடிப்படைவாத மத குழுக்கள் போஷிப்பதற்கான சூழலை உருவாக்கியது மட்டுமன்றி, மத ஒழிப்புக்கும் நாட்டில் வாய்ப்பை ஏற்படுத்தினர்.

“மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்த ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட தேசிய வளங்களை வெளிநாட்டவருக்கு விற்க அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

நாட்டின் பிரதான நிதி நிறுவனமான மத்திய வங்கியைக் கொள்ளை அடித்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட மரண அடியின் மோசமான விளைவுகளை இன்றும் இந்நாடு அனுபவிக்கிறது. நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவை இரண்டு மூன்று மடங்காக்கியதும் அவர்களே. அபிவிருத்தியை நிறுத்தி, உற்பத்திப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்த முறையை பொருளாதார நிபுணர்கள்கூட சுட்டிக்காட்டினர்.

“எமது கலாசாரத்தினதும் பொருளாதாரத்தினதும் உயிர் நாடியான விவசாயத்தை இல்லாதொழித்தனர். நாட்டின் கலாசாரப் பெறுமதிகளைக் கண்டுகொள்ளாததால், நாடு நாளுக்கு நாள் அனைத்து அம்சங்களிலும் பாதாளத்தை நோக்கிப் பயணித்தது. சட்டத்துக்குப் பதிலாக பழிவாங்கல், அவமானங்களை சமூகமயப்படுத்தினர்.  அவர்களின் கருத்துக்கு தலைசாய்க்காதவர்களை அநியாயமாகத் தாக்கினர்.

“அரச ஊழியர்களுக்குத் தேவையற்ற அச்சத்தின் மூலம் நெருக்கடிகளை ஏற்படுத்தி, முழு அரச பொறிமுறையையும் செயலிழக்கச் செய்தனர். அரசியல் எதிர்த் தரப்பினருக்கு தண்டனையை வழங்குவதற்காக எஃப்சிஐடீ போன்ற நிறுவனங்களை உருவாக்கியது சட்டத்துக்கு புறம்பான வகையிலாகும்.

“அநியாயமாக சமூகத்தைப் பாதிப்படையச் செய்யும் போதே, அன்று ஜனநாயக ரீதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாகியது. புதிய அரசியல் கட்சியாக மக்கள் கருத்துக்களை மிகச் சரியாக உள்வாங்கியதன் காரணமாக, பாரிய மக்கள் விருப்பொன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்டதை நாம் கண்டோம்.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பித்து 15 மாதங்களில் போட்டியிட்ட முதலாவது தேர்தலிலேயே நாம் பாரிய மக்கள் விருப்பையும் வெற்றியையும் அடைந்துகொண்டோம். புதிய நாடு பற்றிய மக்கள் கருத்தை அறிந்துகொள்ள, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அன்று பெற்றுக்கொடுத்த வெற்றியே திருப்புமுனையாக இருந்தது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

“ஜனாதிபதி வேட்பாளராக என்னைத் தெரிவு செய்வதற்காக, உங்கள் கட்சி ஏகமனதாக நடவடிக்கை எடுத்தது. வரலாற்றில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் அதிகமான வேட்பாளர்களை தோல்வியடையச் செய்து, பொதுமக்களுக்கான புதிய யுகத்தின் ஆரம்பத்துக்காக, கிராமம், நகரங்கள் தோறும் அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து கைகோர்த்து செயற்பட்டனர்.

“மக்கள் மைய பொருளாதாரம் ஒன்றுக்காக “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கையை ஜனநாயக ரீதியாகப் பாரிய வெற்றியடையச் செய்தது உங்களின் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனுமாகும்.

பொதுத் தேர்தலுக்காக பங்காளிக் கட்சிகளை ஒன்றிணைத்து நாடு பெற்றுக்கொண்ட வெற்றியை, மாபெறும் வெற்றியாக மாற்றும் பயணத்தை நோக்கிச் செல்வதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்தது. 2/3 பெரும்பான்மையுடன் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காகப் பொதுஜன பெரமுன செய்த தியாகம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும்.

“கொவிட் நோய்த்தொற்றின் முன் நாடு செயலற்றுப் போகும் போது, நாட்டைப் பாதுகாக்கும் கட்சியொன்றின் தேசிய பொறுப்புகளுக்கு நீங்கள் தோல் கொடுத்தீர்கள். அரச கொள்கை, சுகாதாரப் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கு, கட்சியின் உறுப்பினர்கள் ஒரு குடும்பம் போன்று செயற்பட்டீர்கள். நாடு இந்த இக்கட்டான நிலைமையிலும் பெற்றுக்கொண்ட வெற்றிகளில் நீங்களும் பிரதான பங்காளிகளாவீர்கள் என்பதை நான் இங்கு நினைவுகூர விரும்புகின்றேன்.

“நல்லாட்சி அரசாங்கம் வீழ்ச்சியடையச் செய்திருந்த தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதே நாட்டு மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. முழுமையான பாதுகாப்புக் கட்டமைப்பையும் மறுசீரமைத்து இயங்குவதற்குத் தகுதிவாய்ந்த நபர்களிடம் பொறுப்புகளை வழங்கி, அன்றிருந்த அவநம்பிக்கை, எதிர்பார்ப்பற்ற நிலையை நாம் இன்று இல்லாதொழித்தோம்.

“நியாயமான மற்றும் முறையான விமர்சனங்களுக்கு இன்று இந்நாட்டில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் இணைந்த பாதாள உலகக் கோஷ்டிகளின் செயற்பாடுகள், இன்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

“அரச சேவை மறுசீரமைக்கப்பட்டு உள்ளதோடு, பட்டதாரிகள் அறுபதாயிரம் பேரை அரச சேவையில் இணைத்து, நாட்டின் அறிவு மற்றும் திறமைக்கு நாட்டை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஏழ்மையில் வாழ்ந்த, திறன்கள் குறைந்த இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“பசுமை விவசாயக் கைத்தொழிலை நோக்கமாகக் கொண்டு, சேதன விவசாயத்துக்கு மாறும் கடுமையான தீர்மானம், முழு எதிர்காலச் சந்ததியினருக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல், மரங்கள், மிருகங்களை ஒழித்து, மனிதர்களை நோயாளிகளாக்கும் இரசாயன பயிர்ச் செய்கைக்குப் பதிலாகப் பசுமை விவசாயம் ஒன்றுக்கான பிரவேசம் என்பதை இந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானமாக மாற்றுவதற்கு நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.

“அதேபோன்று, சுபீட்சமான தேசம் ஒன்றைக் கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே மக்கள் மையப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் தேசிய பொருளாதாரப் பொறிமுறை ஒன்றுக்காக, சவால்மிக்க தீர்மானங்களை அரசாங்கம் எடுத்தது.

அதற்காகக் கட்சியின் அரசியல் பயன்பாடு என்பது தீர்மானமிக்க காரணியாகும் என்பதை நான் மீண்டும் நினைவுப்படுத்தத் தேவையில்லை. நீங்கள் எதிர்பார்த்த நீங்கள் நினைக்கும் வகையில் இந்நாடு மீண்டும் கட்டியெழுப்படும் போது, அதன் பெருமை நீங்கள் செய்த அர்ப்பணிப்புகளின் பிரதிபலனாகும்.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தியல் தெளிவானது. அதனால், நோக்கம் இலக்குகளைக் கொண்டது. உங்கள் கட்சி நாளுக்கு நாள் தேசிய அபிலாஷைகளை நிறைவு செய்துகொள்வதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகளின் பிரதிபலன்களை நாட்டில் கண்டுகொள்ள முடியும். “வித்தியாசமாக சிந்திப்பதற்கு அச்சம்கொள்ள வேண்டாம்” எனும் கட்சியின் முன்மாதிரியான ஸ்லோகத்தின் மூலம் ஒற்றை ஆட்சி, இறையாண்மையுடைய தேசம், வளமான அரசு ஒன்றுக்காக வரலாற்றில் அழிக்க முடியாத பாரிய பொறுப்புக்களை தற்போதும் நிறைவேற்றி வருகின்றது. உங்களின் பெருமையைப் போன்று உங்கள் கட்சியின் பெறுமதியும் அதுவாகும்எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: