செம்மணியில் மனித எலும்புகள் – மீண்டும் சூடுபிடிக்கிறது செம்மணி விவகாரம்!

Saturday, July 21st, 2018

யாழ் செம்மணிப் பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மனித மண்டை ஓடு உள்ளிட்ட மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

1998 இல் யாழ்ப்பாணத்தில் காணாமற்போன நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டு செம்மணியிலேயே புதைக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நடந்த வழக்கில் செம்மணியின் பல இடங்களிலும் தோண்டி 15 மனித உடல்களின் எச்சங்கள் முழுமையான எலும்புக்கூடுகளாகவும் எச்சங்களாகவும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் நேற்றும் மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து யாழ் நகரம் பரபரப்பானது.

யாழ் செம்மணிப் பகுதியில் நீர்த்தாங்கி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதற்காக நேற்று பெக்கோ இயந்திரம் மூலம் நிலம் தோண்டப்பட்டது. அப்போது மண்டை ஓடு மற்றும் எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

நிலம் அகழும் பணி நிறுத்தப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அந்த இடத்துக்குப் பாதுகாப்பு வழங்கினர். இன்று நீதிமன்ற உத்தரவைப் பெற்று அந்த எலும்பு எச்சங்களை மீட்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் மேலும் அங்கு எலும்பு எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.

படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தி கொலை வழக்குடன் அன்று வெளிச்சத்துக்கு வந்தது செம்மணிப் புதைகுழி.

கிருசாந்தி கொலைக்குற்றவாளி சோமரத்ன ராஜபக்சவே செம்மணிப் புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளியே சொன்னார். செம்மணி, அரியாலை, கொழும்புத்துறை ஆகிய இராணுவ முகாம்களில் கொலை செய்யப்பட்டவர்களே செம்மணி வெளியில் புதைக்கப்பட்டிருந்தனர் என்று கூறப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பின்னர் செம்மணிப் பகுதியில் மீண்டும் மண்டை ஓட்டுடன் எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Related posts: