சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையில் உள்ள குடிநீர் கிணறு மாசடைவது தொடர்பில் யாழ் மாநகரசபை அக்கறை செலுத்தவில்லை – மக்கள் குற்றச்சாட்டு!

Monday, May 21st, 2018

யாழ்.யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையில் உள்ள கிணறு மக்களின் பாவனைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், அங்கு கழிவுகளைப் போடுவதனால் குடிநீர் மாசடைவதாகவும் அக்கிணற்றினை பாவனைக்குட்படுத்தும் வகையில் யாழ் மாநகரசபை மேற்கொண்டுதரவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாண பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது முக்கியமாக யாழ்.மாநகரப் பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளின் சுத்தம் மற்றும் சுகாதரம் தொடர்பில் யாழ்.மாநகரசபையால் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதனடிப்படையில் யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கு அருகாமையில் மக்கள் பாவனையிலுள்ள கிணற்று பகுதிகளில் கழிவுகள் போடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அக் கிணற்று நீரை பாவிக்க முடியாத துர்ப்பாக்கியம் இருப்பதாகவும் மக்களால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கழிவுகள் போடப்படும் பட்சத்தில் தாம் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறுபட்ட இடர்பாடுகளை பெற்றுக் கொள்வதாக இது விடயத்தில் யாழ்.மாநகரசபை கவனிப்பாரற்று இருக்காமல் உடனடியாக இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்தி அந்தக் கிணற்றினை பாவனைக்குட்படுத்தும் வகையில் புனரமைப்புச் செய்து தருமாறம் மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அவ்வாறு யாழ்.மாநகரசபை உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு மாநகரசபைக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இதன்போது மக்கள் மேலும் கருத்து தெரிவிகையில் – தற்போது நடைபெறுகின்ற பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் பெயரளவில் மட்டுமே நடைபெறுவதாகவும் மக்கள் நலம்சார்ந்த திட்டங்கள் தொடர்பில் இணைத்தலைமைகள் உரிய அக்கறை செலுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் கடந்த காலங்களில் இவ்வாறான ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களின் போது மக்களின் பிரச்சினைகள் இணங்காணப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகள் காணப்பட்டிருந்ததாகவும், மக்கள் இங்கு குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்றைய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோக் வருகை தராதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: