செத்தல் தேங்காய் என்று கூறுவது தென்னையில் உள்ள ஒரு நோயே – தென்னைப் பயிர் செய்கை சபையின் யாழ்ப்பாணப் பிராந்திய முகாமையாளர் !

Tuesday, May 8th, 2018

மைற்றா பூச்சியின் தாக்கத்தால் தான் தேங்காய் சின்னது போன்று காய்க்கும். அதனைச் செத்தல் தேங்காய் என்று நினைக்கக் கூடாது. அது ஒருவகை நோய்த் தாக்கம். அதற்கான பூச்சிகொல்லி எம்மிடம் உள்ளது. அதனை தென்னை மரத்தில் வைத்தால் போதும். அந்த நோய்த்தாக்கம் இல்லாமல் போய்விடும் என்று தென்னைப்பயிர்ச் செய்கை சபையின் யாழ்ப்பாணப் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார்.

உடுவில் பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்தில் தென்னை வளர்ப்புக்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். ஆனால் தென்னைகளில் தேங்காய் காய்ப்பதில் எண்ணிக்கை குறைவு பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. தென்னை நட்டால் அது தானாக வளரும் என்று நினைக்கின்றார்கள்.

எல்லா இடத்தில் இருக்கும் தென்னைகள் ஒரே இனம் தான். ஆனால் வேறு இடங்களில் ஒரு மரத்தில் சுமார் 120 தேங்காய்கள் காய்க்கின்றது. ஆனால் இங்கு உள்ள தென்னைகள் 50 காய் வரையில் காய்க்கின்றது. இதற்கு என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டும். தென்னை மரம் வளர்வதற்கு மண்ணீரின் அளவு வெப்பநிலை 27 பாகை செல்சியஸ்சில் இருக்க வேண்டும்.

ஆனால் வடக்கு மாகாணத்தில் சாதாரண சூழல் வெப்பநிலை 34 பாகை செல்சியஸ் ஆகக் காணப்படுகின்றது. ஆகவே இந்த நிலையில் இருந்தால் தென்னைமரம் பெரியளவில் காய்க்காது. வெப்ப நிலையைச் சமநிலைப்படுத்துவதற்கு மரத்தைச் சுற்றி கொடிவகையான தாவரங்களை வளர்க்கலாம். மண்ணீரின் அளவைப் பாதுகாக்க தும்பு மட்டைக் குழி அமைக்கலாம். இதற்கு மானியங்களும் உண்டு. தென்னையில் எமக்குத் தெரியாமலே பல நோய்கள் தாக்குகின்றன. அதற்கு நாம் சற்று நேரமெடுத்துச் செயற்பட வேண்டும். இவ்வாறு நாம் தென்னையின் நலன் கருதிப் பராமரித்தால் தான் அது அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்றார்.

நிகழ்வில் பசளை மானியம், குழி வெட்டுதலுக்கான மானியத்துக்கான காசோலைகள் 215 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

Related posts: