செங்கடலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இலங்கையும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் – பாதுபாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சுட்டிக்காட்டு!

Tuesday, January 9th, 2024

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் மூலம் செங்கடலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலகளாவிய பொருளாதார பாரிய நெருக்கடியை சந்திக்கும் என்பதுடன், இலங்கையும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக பொருட்களின் விலை பாரிய அளவில் உயரும் என்பதாலேயே ஜனாதிபதி செங்கடலின் பாதுகாப்புக்கு கடற்படையின் கப்பல் ஒன்றை அனுப்ப நடவடிக்கையெடுத்துள்ளதாக பாதுபாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய நாடாளுமன்ற அமர்வில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போது, நாட்டில் கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு செலவழிக்க வேண்டிய 250 மில்லியனை ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த கப்பலை அனுப்ப அரசாங்கம் செலவழிக்கிறது. இதனால் எமக்கு ஏற்படும் நன்மை என்னவென கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

இது அமெரிக்காவினதோ அல்லது இஸ்ரேலினதோ பிரச்சினை அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். செங்கடலின் பாதுகாப்பு நிலைமைகள் நேரடியாக இலங்கை மீது தாக்கத்தை செலுத்தும். செங்கடல் வழியாக கப்பல்கள் செல்ல முடியாவிட்டால் தென்னாபிரிக்காவை சுற்றியே செல்ல வேண்டும். இதனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். இது எமது பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாம் எந்தவொரு தீவிரவாத அமைப்புக்கும் எதிரானவர்களே. அதேபோன்று முழு உலகமும் தீவிரவாதத்துக்கு எதிரானதாகும். நாம் எப்போதும் உலகத்தின் உதவிகளை எதிர்பார்க்கிறோம். உதவிகளையும் பெற்றுக்கொள்கிறோம். அதனால், பூகோள பொறுப்புகளை நிறைவேற்றும் கடமை எமக்குள்ளது.

இந்தியா சந்திரனுக்கும் சூரியனுக்கும் விண்கலங்களை அனுப்புகிறது. ஆனால், இந்தியாவில் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எமது நாட்டில் உள்ள வறுமையானவர்களை காட்டிலும் வறுமையானவர்களாகும். இந்தியாவில் எவரும் கழிவறைகளை முதலில் கட்டிமுடியுங்கள், அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் எனக் கூறுவதில்லை.

கடல்சார் பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடு என்ற வகையில் அனைவருக்கும் கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்புள்ளது. எமக்கும் அந்தப் பொறுப்பு உள்ளது. தற்போதும் நாம் கடல்சார் நடவடிக்கைளில் ஈடுபட்டே வருகிறோம். குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதி என்பது மனித கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறும் பகுதியாகும்.

ஆனால், உலக பொருளாதாரத்தின் முக்கிய கடல் மார்க்கமாக இந்திய பெருங்கடல் இருக்கிறது. இதனை வெளியில் கூறிக்கொண்டிருக்க முடியும். இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள முக்கிய நாடாக நாம் இருப்பதால் இதனை பாதுகாப்பு பொறுப்பும் எமக்கு உள்ளது. இதனை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் ஜனாதிபதி செங்கடலின் பாதுகாப்புக்கு இலங்கை கடற்படை கப்பலை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.‘‘ என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: