சூழலை பாதுகாத்து நிர்மாணத்துறையை வெற்றிகொள்ள வேண்டும் – ஜனாதிபதி!

சுற்றாடலைப் பாதுகாத்து நிர்மாணத் துறையை வெற்றிகொள்ள தயாராக வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய நிர்மாண விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் ,
புவியியல் அமைவிடம், சுற்றாடல் வளம், அதிகரித்துவரும் சனத்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நிர்மாணத்துறைக்காக எமது இயற்கை வளங்களை பயன்படுத்த முடியும் என்பது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நிர்மாணத்துக்காக மணல், கருங்கல், சிமெந்து போன்றவற்றின் பயன்பாடு குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நாமும் படிப்படியாக அந்த தொழில்நுட்பத்தை நோக்கி பயணிக்க வேண்டுமென தெரிவித்தார்.
அனுபவக் குறைவு மற்றும் தெளிவு இன்மையால் எமது நாட்டில் நிர்மாணத்துறைக்காக கடல் மணலைப் பயன்படுத்த பின்நின்ற போதிலும் கடல் மணலை நிர்மாணத் துறைக்கு பயன்படுத்துவது புதிய விடயமல்ல எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நிர்மாணத் துறை, சுற்றாடல், நாட்டின் பொரளாதார அபிவிருத்தி போன்றவை ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை. எமது நாட்டை சிங்கப்பூராகவோ, ஜப்பானாகவோ மாற்றுவதற்காகவன்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த உன்னதமான வரலாற்று பின்னணியுடன் இயற்கை வளங்களைப் பாதுகாத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பாடுபடுவதாகவும் நிர்மாணத் துறையில் ஈடுபட்டள்ள அனைவரும் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலை தற்போது நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நிர்மாணத் துறையிலுள்ளோரை ஊக்குவித்து அவர்களைப் பாராட்டுவதற்காக இந்த விருது வழங்கும் நிகழ்வு 1990ம் ஆண்டிலிருந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது. வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் தேசிய நிர்மாண கொள்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
முறைமைப்படுத்தல், தரப்படுத்தல், ஆற்றல் விருத்தி, வசதிகளை வழங்குதல் போன்றவற்றின் மூலம் தேசிய அபிவிருத்தி தேவைப்பாடுகளை நிறைவேற்றக்கூடிய வினைத்திறனான நிர்மாண தொழிற்துறையை இலங்கையில் உருவாக்கும் நோக்குடன் இந்த தேசிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பான நிர்மாணத்துக்கான விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.விருது பெற்றவர்களால் புதிய வீடமைப்பு திட்டங்களுக்கான நிதி அன்பளிப்புகள் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.கே.கே. அத்துக்கோரள ஆகியோர் உட்பட நிர்மாணத்துறை சார்ந்த பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|