சூழலுக்கு தீங்கு விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை – பிரதி பொலிஸ்மா அதிபர்!

சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வகைபடுத்தப்பட்ட குப்பைகளை மாத்திரம் சேகரிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்துக்கு பொலிஸாரின் பங்களிப்பு தொடர்பாக கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நகரங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வேலைத்திட்டத்துக்கு இலங்கை பொலிஸ் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். நாட்டில் இருக்கும் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் சுகாதார பிரிவு பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் விதமாக செயற்படும் நபர்களுக்கு எதிராக நாட்டின் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம்.
அத்துடன் குப்பைகளை சட்டவிரோதமான முறையில் இட்டுச்செல்லும் நபர்களுக்கு எதிராக பொலிஸ் கட்டளைச்சட்டம், தண்டனைச்சட்டம் மற்றும் மாநகரசபை கட்டளைச்சட்டம் என்பவற்றுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம். பல வருடங்களுக்கு முன்னர் இந்த சட்டத்தின் கீழ் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டப்பணமாக 100, 200ரூபாக்கனையே விதித்திருந்தது. ஆனால் தற்போது தண்டப்பணம் சில சட்டமூலங்கள் மூலம் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் குப்பைகளை கொட்டும் இடங்கள் அல்லாத வேறு இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடிய நபர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நகர சபைகளுடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் . குறிப்பாக குப்பைகளை கொட்டும் இடங்களில் பொலிஸார் சீறுடையிலும் சிவில் உடையிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளோம். அத்துடன் தவறு செய்பவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை. ஆரம்பமாக இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை தெளிவுபடுத்தி ஆலோசனை வழங்குவோம். அத்துடன் இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் இடம்பெறக்கூடிய வகுப்பில் தொடர்ந்து 3 நாட்கள் கலந்துகொள்ள செய்யவுள்ளோம். இதே குற்றத்தை தொடர்ந்து மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நிலைநாட்டவுள்ளோம் என்றார்.
Related posts:
|
|