சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகள் – சுற்றுலா பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடு இல்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Friday, July 9th, 2021சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருப்பதாக தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலாத்துறை தொழில் முனைவோரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன்கள் மற்றும் லீசிங்கை மீள செலுத்துவதற்கு 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம்முதல் பல்வேறு சலுகைகளை அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம் 9 ஆம் திகதி மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இவர்களுக்கான கடன் சலுகையை ஜூலை 31 ஆம் திகதிவரை நீடிக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், எதிர்காலத்தில் கொவிட் தொற்று பரவல் நிலைமைகளை ஆய்வுக்கு உட்படுத்தி சலுகைக்காலத்தை வழங்குவது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சலுகைக்காலத்தில் வட்டி செலுத்துவதை இடைநிறுத்தவும் லீசிங்க செலுத்தப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்தவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையினருக்கு பாதிப்பின்றி இலங்கை மத்திய வங்கி உரிய தீர்மானங்களை எடுக்கும். இருந்தபோதும் சுற்றுலாத்துறையை நம்பி தொழில் செய்துவருபவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை வழங்குவதாக இருந்தால், சுற்றுலாத்துறையை விரைவாக யதார்த்த நிலைக்கு கொண்டுவர வேண்டும். அதனை விரைவாக மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கின்றன சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியினர் இதனை விமர்சிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் கிராமங்களுக்கு வருகை தந்தால் அடித்து விரட்டுமாறு கூறுகின்றனர்.சுற்றுலாப் பயணிகளால் கொவிட் தொற்று பரவியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாக் குழுக்களால் கொவிட் தொற்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரவவில்லையென்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.
அதேநேரம் நாட்டுக்கு சுமையற்ற விதத்தில் சுற்றுலாப் பயணிகளை கையாளும் விசேட முறைமைகளை நாம் கையாளுகிறோம்.
அத்துடன் சுற்றுலாத்துறைக்கான புதிய வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு நாட்டுக்குள் வருபவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடின்றி தமது பயணங்களை தொடர முடியும்.
அதேபோன்று எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் அனைவருக்கும் ஒரு தடுப்பூசியேனும் வழங்கப்படுவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|