சுற்றுலாத்துறைக்கு நிலையான கொள்கை அவசியம் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்து!
Tuesday, August 15th, 2023அரசாங்கங்கள் அல்லது அரசியல்வாதிகள் மாறும்போது, மாறாத சுற்றுலாக் கொள்கையொன்று விரைவில் முன்வைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் கருத்து வெளியிட்ட அவர், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறை, தற்போது முன்னேற்றமடைந்து வருகின்றது. ஆனாலும் நாம் எதிர்பார்த்துள்ள இலக்கை இன்னும் அடையவில்லை. படிப்படியாக நாம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும்.
தற்போது நாடு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஸ்திர நிலையை அடைந்து வருவதால் எமது நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
தமது சொந்தக் கட்டிடங்களை சுற்றுலா விடுதிகளாக பயன்படுத்த விருப்பமுள்ள கட்டிட உரிமையாளர்கள் சுற்றுலா சபையில் பதிவு செய்து கொள்ள முடியும் அதன் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டுவதுடன் நாட்டின் சுற்றுலாத்துறையும் மேம்படும்.
விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், சுற்றுலாத் துறைக்கான புதிய கொள்கை ஒன்றை வகுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அது நடைமுறைக்கு வருமிடத்து, நாட்டில் அமைச்சர்கள் மாறினாலும், எப்போதும் மாறாத நிலையான சுற்றுலாக் கொள்கையுடைய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|