சுயநிதிப் பொறிமுறையின் கீழ் நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்பு !
Tuesday, December 13th, 2022அரசாங்கத்தின் நிதி வசதிகள் கிடைக்கும் வரை சுயநிதிப் பொறிமுறையின் ஊடாக நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடருமாறு அமைச்சின் செயலாளருக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக நகர மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் சில வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் தற்காலிக பின்னடைவை சந்தித்தமையே இதற்குக் காரணம்.
தேசிய மட்டத்தில் மிக முக்கியமான நகர மறுசீரமைப்புத் திட்டத்திற்கு திறைசேரியில் இருந்து பணம் கிடைக்கும் வரை சுயநிதி பொறிமுறையின் ஊடாக பணத்தை ஒதுக்கி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையானது 2010 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள வசதி குறைந்த மக்களின் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் நகர மறுசீரமைப்பு திட்டத்தை ஆரம்பித்தது.
நகர மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் 50,000 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், 190,054 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
சுயநிதி பொறிமுறையின் ஊடாக அடுத்த வருடம் குருநாகல் மற்றும் மஹரகமவில் 900 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது நடைபெற்று வரும் கொலம்பகே மாவத்தை மற்றும் டொரிங்டன் மாவத்தை வீடமைப்புத் திட்டங்களும் தொடரும்.
மேலும் நகர மறுசீரமைப்புத் திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் 400 ஏக்கர் காணி வர்த்தக நோக்கங்களுக்காக விடுவிக்கப்படும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 116 ஏக்கர் காணி ஏற்கனவே மீள் அபிவிருத்திக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் மற்றுமொரு நோக்கமானது, கொழும்பை தூய்மையான மற்றும் இனிமையான சூழலுடன் உலகப் புகழ்பெற்ற நகரமாக மாற்றும் வகையில், நகர அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்திலான புதிய வீட்டுத் திட்டங்களில் இந்தக் குடும்பங்களை மீள்குடியேற்றுவது ஆகும்.
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 48,491 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மொத்த தொகையில் 43,740 மில்லியன் ரூபா அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காகவும் மேலும் 20,433 மில்லியன் ரூபா நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|