சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு

Friday, December 1st, 2017

புன்னலைக்காட்டுவான் வடக்கு பகுதியில் உள்ள மண் விற்பனை செய்யும் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை பறித்து விட்டு, அதனைக் கேட்கச் சென்ற உரிமையாளர் மீது கஞ்சா இருந்ததாக பொய்யான வழக்குத் தாக்கல் செய்த சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

புன்னாலைக்காட்டுவான் வடக்கு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரதாசன் சாரங்கன் என்ற நபரே இம் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி மேற்படி முறைப்பாட்டுக்காரரான இந்த நபர் கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த நபரினால் நடத்தப்படும் மண் விற்பனை செய்யும் நிலையத்தில் வைத்து சுன்னாகம் பொலிஸார் இளைஞன் ஒருவரைத் தாக்கியுள்ளனர்.

குறித்த இடம் தன்னுடையது என்றும் ஏன் இவ்விடத்தில் வைத்து இளைஞனை அடிக்கிறீர்கள் என வினாவியுள்ளார். தகாத வார்த்தைகளினால் ஏசிய பொலிஸார் நாங்கள் பொலிஸ் எதனையும் செய்வோம் எனக் கூறி கடுமையாகத் தாக்கியுள்ளார். குறித்த சம்பவத்தைப் படம் பிடித்த போது மேற்படி நபரைப் பிடித்த பொலிஸார் அவரைத் தாக்கியுள்ளனர். அத்துடன் அவரது மோட்டார் சைக்கிளில் கஞ்சா இருப்பதாக கூறி பொய்யான வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டது.

குறித்த, முறைப்பாட்டுக்காரர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சென்று மோட்டார் சைக்கிளினை கேட்ட போது மறுப்புத் தெரிவித்த பொலிஸார் கஞ்சா இருந்தமை தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். இவ் பொய்யான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் யாழ். மாவட்டப் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்த பாதிக்கப்பட்ட நபர், நேற்று யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

Related posts: