சுன்னாகம் நீர் மாசு விவகாரம்; மல்லாகம் மாவட்ட நீதவான்  வாசஸ்தலத்தில் ஆஜரான ஐங்கரநேசன்!

Saturday, April 9th, 2016

“வடமாகாண சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டமைக்கு வடமாகாண சபையின் விவசாய அமைச்சர்  ஐங்கரநேசன் மாத்திரம் பொறுப்பல்ல. மாகாண சபையினாலேயே  இந்த அறிக்கை வெளியிடப்பட்டது”  ஆகவே , இந்த விடயத்தில் வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டுமென வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி முத்துக் குமார் மல்லாகம் மாவட்ட நீதவானின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்  ‘நீர் மாசுக்கு தாங்கள் பொறுப்பல்ல மத்திய அரசு தான் பொறுப்பு ‘ எனச் சுட்டிக்காட்டியதுடன்  கழிவெண்ணை பாதிப்புத் தொடர்பான அறிக்கையொன்றையும் நீதவான் முன்னிலையில் சமர்ப்பித்தது . இதனையடுத்து வழக்கு விசாரணையை  இந்த மாதம் -19 ஆம் திகதி வரை ஒத்தி வைத்து நீதவான் உத்தரவிட்டார்.

சுன்னாகம் நீர் மாசு விவகாரம் தொடர்பான வழக்கு மல்லாகம் மாவட்ட நீதவான்  வாசஸ்தலத்தில் நேற்று  (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ .யூட்சன் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

கழிவெண்ணை  காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு கடந்த பெப்ரவரி மாதம்-5 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ .ஐங்கரநேசன், வடமாகாண அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் , நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பட்டிருந்தது. இந் நிலையில் குறித்த வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ . யூட்சன் முன்னிலையில் கடந்த மாதம் -18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது முன்னைய வழக்குத் தவணையின் போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ .ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.இந்த நிலையில் வழக்கு விசாரணை மீண்டும் கடந்த-17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

கடந்த  பெப்ரவரி மாதம்-5 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது  வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடக்கு விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் வழக்குத் தவணையான கடந்த மாதம் -17 ஆம் திகதி வழக்குத் தவணைக்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக அவர் தான் திடீரென வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால்  நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்க முடியாது எனத் தெரிவித்து தனது சட்டத்தரணியூடாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி அனுமதி கோரியிருந்தார். இதன் படி அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதவான் அடுத்த வழக்குத் தவணையின் போது கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார்.

இந் நிலையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும்- 18 ஆம் திகதி வரை நீதிமன்ற விடுமுறைக் காலம் என அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால் வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் நேற்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வாசஸ்தலத்தில்  தனது சட்டத்தரணியூடாக ஆஜராகியிருந்தார். இதன்போது ஐங்கரநேசன் சார்பாக எழுத்து மூலமான சமர்ப்பணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட போதும்அதனை ஏற்க மறுத்த  நீதவான் அடுத்த வழக்குத் தவணையின் போது எழுத்து மூலமான சமர்ப்பணம் செய்யுமாறும்  தெரிவித்தார். இதன்போது பொதுமக்கள் நலன் சார்ந்து  ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம்,வி.மணிவண்ணன், , கே.சுகாஷ் ,சோபிதன் ஆகியோர் முன்னிலையாகியிருந்ததுடன் , பிரதிவாதிகள் சார்பில் வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ .ஐங்கரநேசன், மற்றும் அவரது சட்டத்தரணி ஆகியோரும் முன்னிலையாகியிருந்தனர்.

Related posts: