சுதேச தொழில்நுட்பம் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் அணிசேரா நாடுகளின் விஞ்ஞான, தொழில்நுட்ப மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்து!

Friday, February 26th, 2021

உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உதவும் வகையில் ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தில் வாக்குறுதியளித்ததைப் போலவே, இந்த நோக்கத்துடன் ஒரு தனி தொழில்நுட்ப அமைச்சை அரசாங்கம் நிறுவியுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

விஞ்ஞான, தொழில்நுட்பத்திற்கான அணிசேரா நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுகளின் 15 வது ஆளுநர் சபை கூட்டத்தில் இணைய தொழிநுட்பத்தின் ஊடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

22 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ்வருட மாநாட்டிற்கு இலங்கை தலைமை மற்றும் உபசரிப்பு பொறுப்பை வகித்திருந்தது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் – தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதாரம் கொண்ட நாடாக மாற, சுதேச தொழில்நுட்பம் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

சூழல் நட்புடைய சுதேச மற்றும் பாரம்பரிய தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க வரலாறு எங்களிடம் உள்ளது. கோவிட் தொற்றுநோய் நிலைமைகள் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்திற்கும், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் சுகாதாரத் துறையில் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறனை நிரூபிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: