சுகாதார விதிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தேசிய சுதந்திர நிகழ்வுகள் நடத்தப்படும் – பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, February 3rd, 2021

அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார விதிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தேசிய சுதந்திர நிகழ்வுகள் நடத்தப்படுமென பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பில் எந்தவித அச்சமும் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இம்முறை சுதந்திர தின நிகழ்வில் மற்றும் மரியாதை அணிவகுப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்த அவர், இது தொடர்பில் எவரும் பயப்பட தேவையில்லை. சுகாதார பாதுகாப்பிற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சிவில் பாதுகாப்பு படையினர் சிலருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் இவர்களின் ஆரம்ப தொடர்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சகல சந்தர்ப்பங்களிலும் மாற்று வழிமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சகல படைகளிலும் மேலதிக படைவீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல ஆசனங்களுக்கிடையில் இடைவெளி பேணப்பட்டுள்ளது. சகலரும் கண்டிப்பான முகக்கவசம் அணிய தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை பொதுமக்கள் நேரடியாக வருகைதந்து பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றும் சந்தர்ப்பத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இம்முறை தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய நாடளாவிய ரீதியில் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் மாவட்ட, பிரதேச செயலாளர்களுக்கும் கிராம சேவகர்களுக்கும் அறிவிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: