சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் முன்னர் எதிர்கொண்ட சிரமங்களை நாடு மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள நேரிடும் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Monday, December 27th, 2021

நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கத் தவறினால், முன்னர் கொரோனா தொற்று அலைகளின் போது ஏற்பட்ட சிரமங்களை நாடு மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள நேரிடும் என விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றின் ஆபத்து இன்னும் தொடர்கின்ற நிலையில் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம் என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.

இதேநேரம் நாட்டில் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர் அன்வர் ஹம்தானி வலியுறுத்தியுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி புதிய மாறுபாடுகளுக்கு எதிராக மேலதிக பாதுகாப்பை வழங்கும் மற்றும் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே

கொரோனா தொற்று நிலைமை தொடர்பான சுகாதார அமைச்சு தினமும் வெளியிடும் புள்ளிவிபரங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

புள்ளிவிபரங்களில் அறிவிக்கப்படுவதை விட அதிகமான தொற்றாளர்கள் தினமும் சமூகத்திற்குள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில், தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற தவறான எண்ணம் மக்களுக்குள் ஏற்பட்டுள்ளது. இதன் பிரதிபலனாக மக்கள் கவனமின்றி, பாதுகாப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களில் நாடு முழுவதும் இப்படியான நிலைமையை காணக் கூடியதாக இருந்தது. இதன் காரணமாக எதிர்காலத்தில் மீண்டும் துரதிஷ்டவசமான நிலைமை ஏற்படலாம் எனவும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: