சுகாதார நடைமுறைத் தளர்வுகளை துஷ்பிரயோகம் செய்யவேண்டாம் – மாவட்ட செயலகம் வேண்டுகோள்!

Saturday, January 16th, 2021

சுகாதார நடைமுறைத் தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ். மாவட்ட செயலகம் வலியுறுத்தியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பாக இன்று சனிக்கிழமை மாவட்டச் செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் –  “யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழில் தொற்றுக்குள்ளான 126 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் ஆயிரத்து 415 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 598 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணப் பொதிகள் கட்டங்கட்டமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் கொரோனா தொற்றினைத் தடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சில யாழ். மாவட்டத்தில் தளர்த்தப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல், எதிர்வரும் காலங்களில் தனியார் கல்வி நிலையங்களை ஆரம்பிப்பதற்குரிய அறிவுறுத்தல்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சினிமா திரையரங்குகள் மற்றும் வழிபாட்டு இடங்கள் போன்றவற்றில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைவிட மீன் சந்தைகள், அதேபோல் மூடப்பட்டிருந்த கடைகள் மீள திறப்பதற்குரிய அனுமதி சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதேபோல், நேற்றைய தினம் இடம்பெற்ற சுகாதார வழிகாட்டல் குழுவின் சிபார்சின் படி எதிர்வரும் திங்கட்கிழமைமுதல், யாழ்ப்பாண மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் வரவேற்பு மண்டபங்கள் மற்றும் விடுதி மண்டபங்களை திறப்பதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியானது அந்த மண்டபத்தினுடைய கொள்ளளவில் 50 வீதத்திற்கு சமூக இடைவெளி பேணப்பட்டு, அதேபோல் அனுமதிக்கப்படக் கூடிய ஆட்களின் எண்ணிக்கை 150 எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைவிட எதிர்வரும் 18ஆம் திகதி மூடப்பட்டிருந்த சந்தைகளை மீளத் திறக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, அந்தந்த சந்தைகளுக்குப் பொறுப்பான உள்ளூராட்சி மன்றங்கள் அதற்குரிய சுகாதார வழிகாட்டலைச் சரியாகப் பின்பற்றி சந்தைகளைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது சுயகட்டுப்பாட்டோடு தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது கட்டாயமாக இருக்கின்றது.

அத்தோடு, தற்போது சுகாதாரத் திணைக்களத்தினரால் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்வோர் தனிமைப்படுத்தப்படத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதாயினும் தங்களுடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தினைப் பொறுத்தவரை சுகாதாரப் பிரிவினர் மற்றும் ஏனைய பிரிவினரின் ஒத்துழைப்புடன் கொரோனா நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம். எனினும் இந்த நடைமுறையானது பொதுமக்களின் சிரமத்தைக் குறைப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கிடையில் பயணம் செய்வோரை சிரமத்துக்கு உள்ளாக்காதவாறு இந்த நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தக் கட்டுப்பாடு முழுமையாக தளர்த்தப்பட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: