சுகாதார சேவையில் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை!

Wednesday, July 19th, 2017

சுகாதார சேவையில் வைத்தியர்கள், தாதியர்கள் தவிர்ந்த ஏனைய சேவையில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதாரதுறை தொழிற்சங்கத்துடன் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். நாரஹென்பிட்டியில் இதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதற்கமைவாக மகப்பேறு, சுகாதார கனிஷ்ட அலுவலக உதவியாளர், குடும்ப சுகாதார சேவை அதிகாரி, சுகாதார முகாமைத்துவ சேவை அதிகாரி ஆகியவற்றில் நிலவும் வெற்றிடயங்கள் நிரப்பப்படவுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளில் மகப்பேற்று பிரிவில் ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இவ்வருடத்தில் 541 பேர் இத்துறையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்கள் தற்பொழுது வைத்தியசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளனர். சுகாதார கனிஸ்ட அலுவலகங்களில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு 900 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

குடும்ப சுகாதார சேவையில் பத்தாயிரத்து 714 பேருக்கான வெற்றிடங்கள் உண்டு. இருப்பினும் தற்பொழுது எட்டாயிரத்து 601 அதிகாரிகளே பணியாற்றுகின்றனர். மேலும் மூவாயிரம் பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். தற்பொழுது 624 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களை விரைவாக பணிகளில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. சுகாதார சேவை அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்காக தனியான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தை வகுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். ஒரே முறையில் ஆயிரம் பேரை பயிற்றுவிக்கக் கூடிய வகையில் இதற்கான திட்டம் வகுக்கப்படும். எடுத்துக்காட்டு சுகாதார அலுவலக உதவியாளர்களாக சேவையாற்றுவோரை நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு தொழில்சங்கம் முன்வைத்த கோரிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சுகாதார ஊழியர்களுக்காக உத்தியோகபூர்வ வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்காவும் வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய துறைகளிலுள்ள பணியாளர்களுக்கும் உத்தியோகபூர்வ வீடுகளை அமைக்கும் திட்டமும் வகுக்கப்படவுள்ளது.

Related posts: