சீ.ரி.ஸ்கானர் பழுதால் யாழ் போதனா வைத்தியசாலை: நோயாளர்கள் சிரமம்!

Tuesday, December 4th, 2018

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கும் 30 மருத்துவமனைகளுக்கும் பொதுவாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மட்டுமே சீ.ரி. ஸ்கானர் உள்ள நிலையில் குறித்த ஸ்கானரும் கடந்த 20 தினங்களாக பழுதடைந்த நிலையிலேயே உள்ளது.

இதன் காரணமாக நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கு நோயாளர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிடுகையில் ‘‘யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையில் உள்ள ஸ்கானர் 8 ஆண்டுகள் பழமையானது.

அதேநேரம் போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டுக்கு இரண்டு ஸ்கானர்கள் தேவையானபோதிலும் ஒரேயொரு ஸ்கானர் மட்டுமே உள்ளது. இந்த ஸ்கானரில் நாள் ஒன்றுக்கு 60 ஸ்கானிங் இடம்பெற்றன.

இவ்வாறு அதிகரித்த வேலைப் பளுவின் காரணமாக குறித்த ஸ்கானர் பளுதடைந்திருக்கலாம். எனினும் குறித்த ஸ்கானர் சீர்செய்ய நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது’’ – என்றார்.