சீர்திருத்தங்கள் பெப்ரவரி, மார்ச்சில் அறிவிக்கப்படும் -பிரதமர்

இலங்கை கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருவதாகவும், அது தொடர்பிலான அறிவித்தலை, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அரசாங்கம் அறிவிக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய வரி சலுகைகள், பாரிய பொருளாதார உறுதிப்படுத்தல்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதானது இலங்கை மிகவும் இலகுவாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிற்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் அங்கு நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே இந்த விடயங்களை கூறியுள்ளார்.
இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவுள்ளதோடு, இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாநிலங்களில் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தனித்தனி ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூருடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்துள்ள பிரதமர் இது வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள ஏனையை நாடுகளுடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு வாய்ப்பாக அமையுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் அடுத்து கட்டமாக மியன்மார், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா மற்றும் ஜப்பானுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிரதமர் ரணில் விக்மசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|