சீரற்ற காலநிலை; யாழ்ப்பாணத்தில் 46 குடும்பங்கள் பாதிப்பு – குழந்தை காயம்!

Wednesday, May 26th, 2021

யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –   “யாழ். மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு இதில் குழந்தை ஒன்று காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடுங்காற்றின்  தாக்கத்தின் காரணமாக இரண்டு வீடுகள் பெரும் சேதமடைந்துள்ளதோடு,  42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன்  சிறு தொழில் முயற்சியாளர்கள் ஐந்து பேர்  காற்றின்  தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் அனைத்து விபரங்களும் பிரதேச செயலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு மத்திய அனர்த்த  முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

குறிப்பாக வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு  பாதிப்பு  ஏற்பட்டுள்ளது” எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

00

Related posts: