சீரம் நிறுவனத்திடமிருந்து எதுவித தாமதமுமின்றி குறிப்பிட்ட தினத்தில் தடுப்பூசி கிடைக்கும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன !

Wednesday, March 10th, 2021

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து இலங்கை கொள்வனவு செய்யவுள்ள 10 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசி எதுவித தாமதமுமின்றி குறிப்பிட்ட தினத்தில் இலங்கைக்கு கிடைக்குமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதற்கான உறுதிமொழியை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக இலங்கைக்கு கிடைக்கவுள்ள தடுப்பூசிகள் தாமதமாகலாமென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகருடன் தாம் கலந்துரையாடியுள்ளதாகவும் அதன்போது, இந்திய உயர்ஸ்தானிகர் எதுவித தாமதமுமின்றி உரிய காலத்தில் மேற்படி தடுப்பூசி இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்கப்படுமென்ற உறுதிமொழியை வழங்கியதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இரண்டாவது கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தமிழ், சிங்கள புதுவருடத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. அதற்கிணங்க முதற்கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்ட முறைமையின் கீழ் கடந்த முறை முன்னுரிமை வழங்கப்பட்டவர்களுக்கே இம்முறையும் இரண்டாவது கட்ட தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

அதன்படி கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், முப்படையினருக்கும் மற்றும் சுகாதாரத் துறையினருக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள்வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிவித்தலை ஏற்க முடியாது - அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!
தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை பாரபட்சமின்றி அபிவிருத்தி முன்னெ...
நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் - கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகால...