சீன சேதனப்பசளை விவகாரம் – 6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவை பகைத்துக்கொள்ள முடியாது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, December 20th, 2021

சீன சேதனப்பசளை விவகாரத்தில் 6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவை பகைத்துக்கொள்ள முடியாது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடு என்பதால் ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அதனால் இலாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருணாகலில் பதிவாளர் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

சீன சேதனைப் பசளை விவகாரத்தில் பேச வேண்டியது பண விவகாரம் குறித்து அல்ல. இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்தே அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. எனவேதான் அந்த நிறுவனத்திற்கான நிதி தொகையை வழங்க வேண்டும்.

நாடுகளுடன் பணியாற்றும் போது கவனமாக செயற்பட வேண்டும். இதில் தவறுகள் எதுவும் காணப்படுவதாக எனக்கு தெரியவில்லை. மாறாக எவரேனும் தவறு செய்தால், அந்த தவறை கண்டுபிடிக்க வேண்டும்.

அதற்கு முன் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படப் போகும் நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும். உடன்பாடு ஏற்பட்ட பிறகு தவறு நடந்திருந்தால் பணத்தை செலுத்த வேண்டும்.

6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவுடன் கோபப்படுவதா அல்லது அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதா என்பதிலேயே முதலில் அவதானம் செலுத்த வேண்டும்.

மக்களை பற்றி சிந்தித்து தான் அரசாங்கம் முடிவுகளை எடுக்க வேண்டும். இது இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடு என்பதால் ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் இலாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது. ஏனைய நாடுகளை கோபித்துக்கொண்டு பயணம் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: