சீன இராணுவத்தினருக்கு இடமளிக்கப்பட மாட்டாது – இலங்கை!

Monday, February 6th, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதமான பங்குகள் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பின்னரும் அங்கு சீன இராணுவத்தின் நடவடிக்கை அனுமதிக்கப்படாது என சீனாவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

வேறு நாடுகளைப் பற்றி தாம் அறியவில்லை எனக் குறிப்பிட்ட சீனாவிற்கான தூதுவர் கலாநிதி கருணாசே கொடித்துவக்கு, எந்தவொரு இராணுவத் தேவைக்காகவும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்தக் கூடாது என சீன முதலீட்டாளர்களுக்கு கூறியுள்ளார்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற ஸ்ரீலங்காவின் சுதந்திர தின நிகழ்வின் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்குவதற்கு எதிராக பிரதேச மக்களும் தொழிற் சங்கங்களும் முன்னெடுத்துள்ள போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என அவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்குவது குறித்து இந்தியாவின் கரிசனை காணப்படுகின்ற போதிலும், சீனாவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது என குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டங்கள் குறித்து சீனா கவலை வெளியிட்டுள்ளமை குறித்து வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாசேன கொடித்துவக்கு,  சிறிய குழுக்களின் எதிர்ப்புக்கள் இருந்தாலும் அரசாங்கம் திட்டமிட்டவாறு செயற்படும் என உறுதி அளித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதத்தை 1 தசம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சீன நிறுவனத்திற்கு வழங்கும் திட்ட வரைபு உடன்படிக்கையில் கடந்த டிசம்பர் மாதம் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டிருந்தது.

மீதமாகவுள்ள 20 வீதம் ஸ்ரீலங்கா துறைமுக அதிகார சபையிடம் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பௌத்த மதகுருமாரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டையில் விசேட கைத்தொழில் வலயத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டியிருந்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறும் சீனாவின் பட்டுப்பாதை மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பார் எனவும் சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு  மேலும் சுட்டிக்காட்டினார்

4a9d887d55864a284d92b59d2fd0d64a_XL

Related posts: