சி.ரி. ஸ்கான் இயந்திரமின்றி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரிதும் அவதி!

Wednesday, April 19th, 2017

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வடமாகாணசபையின் நிர்வாக ஆளுகைக்குட்பட்ட வைத்தியசாலைகளில் முக்கியமான வைத்தியசாலையாகும். இங்கு சி.ரி.ஸ்கான் இயந்திரம் இல்லாமையால் நோயாளர்கள் பெரிதும் அவதியுறுவதாகத் தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேற்படி சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஏனைய வைத்தியசாலைகளில் இல்லாத இரு பெரும் பிரிவுகளான புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, உளநல சிகிச்சைப் பிரிவு ஆகிய சிறப்பு அலகுகள் உள்ளன. யாழ்.பல்கலைக்கழகத்தின் போதனா பிரிவுகளாகவும் இந்த இரு அலகுகளும் காணப்படுகின்றன. இந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஒருநாளைக்கு 25 இற்கும் மேற்பட்ட புற்றுநோயாளர்கள் சி.ரி. ஸ்கான் எடுப்பதற்காக அம்புலன்ஸ் வாகனம் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ஒரு சி.ரி. ஸ்கான் மட்டும் உள்ளமையால்  அந்த ஸ்கான் பெரும்பாலான காலங்களில் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றமையால்  இந்த நோயாளர்கள் வவுனியா வைத்தியசாலைக்கோ அன்றி அனுராதபுரம் வைத்தியசாலைக்கோ  கொண்டுசெல்லப்படுகின்றனர். சில நோயாளர்கள் சி.ரி. ஸ்கான் எடுப்பதற்குக் கொண்டு செல்லப்படுகின்ற சந்தர்ப்பத்தில் மரணிக்கின்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இதனைவிட, புற்றுநோய் தவிர்ந்த ஏனைய மருத்துவ விடுதிகளில் தங்கியுள்ளவர்களும், உளநல நோயாளர்களும் இவ்வாறு சி.ரி. ஸ்கானுக்காகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றமை வழக்கம்.அத்துடன், அம்புலன்ஸ் சேவைகளும் இங்கு போதியனவாக இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. சில புற்று நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக மகரகமவுக்குக் கொண்டுசெல்லவேண்டிய நிலைமையும் காணப்படுகின்றது.

சி.ரி. ஸ்கானுக்காக யாழ்.போதனா வைத்தியசாலை, வவுனியா சிலவேளை அனுராதபுரம் வரை செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இதனால் அம்புலன்ஸ் சேவை நோயாளருக்குத் தேவை ஏற்படுகின்ற உரிய நேரத்தில் கிடைக்காமையால் நோயாளர்கள் அவதியுறுகின்றனர்.

இவ்வாறிருக்க, தற்போது மத்திய சுகாதார அமைச்சால் வடமாகாணத்துக்கென சி.ரி.ஸ்கான் ஒன்று வழங்கப்படவிருப்பதாக கடந்த வாரம் எமது வைத்தியசாலைக்கு வருகைதந்த மத்திய சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடல் மூலம் அறியக்கிடக்கின்றது. அந்த இயந்திரம், வடமாகாணத்தில் முக்கிய நோயாளர் சேவையை ஆற்றுகின்ற  மீள்குடியேற்றப் பிரதேசத்தில் அமைந்துள்ள அதி சிறப்புவாய்ந்த  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை விடுத்து வேறொரு வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த விடயம் தொடர்பில் வடக்குமாகாண சபை தகுந்த நிலைப்பாட்டை எடுத்து மக்கள் நலன் கருதிச் செயற்பட வேண்டும் எனவும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் கேட்டுள்ளது.

Related posts: