சிறைச்சாலைகளிலிருந்து முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்கள் தடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, June 2nd, 2020

சிறைச்சாலைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச் செயல்கள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளின் நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்று வரும் பாரியளவிலான போதைப் பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் சிறைச்சாலைகளிலிருந்து வழிநடத்தப்படுவதாக திடமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறைச்சாலைகளுக்குள் செல்லிடப்பேசி பயன்பாட்டை முற்று முழுவதுமாக தடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலை திணைக்களம், காவல்துறை திணைக்களம் ஆகியனவற்றில் ஏதேனும் சிக்கல் நிலவினால் அது நாட்டின் சட்டத்தை அமுல்படுத்துவதில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் சரியானவற்றை செய்யும் அரச அதிகாரிகளின் சார்பில் குரல் கொடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறைச்சாலைகளில் நிலவி வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: