சிறு குற்றமிழைத்த கைதிகளை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை!
Sunday, April 12th, 2020போதை பொருள் தொடர்பான சிறிய குற்றங்களை இழைத்த கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான வழிமுறைகள் அடங்கிய கடிதத்தை சட்டமா அதிபர் தப்புல டி லிவேர, பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி இருந்தார்.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் சிறைச்சாலைகளில் உள்ள போதை பொருள் தொடர்பான சிறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு அண்மையில் ஜனாதிபதி செயலாளர் சட்டமா அதிபரை கடிதம் மூலம் கோரியிருந்தார்.
அதற்கமைய 2 கிராமுக்கும் குறைந்த அல்லது அதற்கும் மேற்படாத ஹெரோயின் போதை பொருள் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பிணை வழங்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஹெரோயின் மொத்த எடை 10 முதல் 20 கிராம் வரை இருக்கும் போது 3 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் விளக்கமறியலில் இருந்த சந்தேக நபர்கள் மற்றும் அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளியிடப்படாத நிலையில், 5 முதல் 10 கிராம் எடையுள்ள ஹெரோயின் போதை பொருள் வழக்குடன் தொடர்புடையவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக விளக்கமறியலில் இருந்தால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்டுவதற்கு தகுதியானவராவார்கள்
அத்துடன் ஹெரோயின் போதை பொருளின் மொத்த எடை 5 கிராமுக்கு குறைவாக இருக்கும் போது சிறைத் தண்டனை பொருந்தாது, மேலும் ஒன்றுமுதல் இரண்டு கிராமுக்கு மேல் மற்றும் 3 மாதங்களுக்கும் குறைவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் பிணை வழங்கல் செல்லுப்படியாகும்.
ஹெரோயின் போதை பொருளின் எடை ஒரு கிராமுக்கு குறைவாக இருந்தால் அவருக்கு பிணை வழங்க வாய்ப்புள்ளதாக சட்டமா அதிபர் பொலிஸாரை தெளிவுப்படுத்தியுள்ளார்.
Related posts:
|
|