சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் ஒன்றிணையவேண்டும் – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் குலகௌரி!
Tuesday, July 3rd, 2018கடந்த காலத்தில் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்தபோது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வடக்கில் சிறுவர் மற்றும் பெண்களது பாதுகாப்புக்காக, முன்னேற்றத்திற்காக, அவர்களது வாழ்வாதாரத்திற்காக பல்வேறு நலன்சார் திட்டங்களை முன்னெடுத்து சாதித்துக் காட்டியிருந்தோம்.
ஆனால் இன்று பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதுடன் எந்நேரத்தில் எது நடக்குமோ என்ற அச்சநிலை காணப்படுகின்றது. இதனை தடுத்து நிறுத்த இன்றைய ஆட்சியாளர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ரஞ்சித்ராஜ் குலகௌரி தெரிவித்துள்ளார்.
புத்தூர் நவற்கிரி சரஸ்வதி முன்பள்ளி விளையாட்டு நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இன்றைய சிறுவர்கள்தான் நாளைய வழிகாட்டிகளாக வளர்ந்து வருகின்றனர். அந்தவகையில் அவர்களை சரியாக வழிநடத்தவேண்டியது பெற்றோர்களுடைய கடமையாகும். ஆனாலும் எமது இளம் சமூகம் இன்று தவறான வழிக்கு சென்றுகொண்டிருக்கின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு பொது அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் மட்டுமன்றி தமிழ் அரசியல் தலைமைகளும் முன்வரவேண்டும்.
இந்த கிராமத்தில்கூட முன்பள்ளியை கட்டுவதற்கும், இந்த பொதுநோக்கு மண்டபத்தை கட்டுவதற்கும் உறுதுணையாக இருந்தது எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இவ்வாறான மக்களுக்கான சேவைகளை மேற்கொண்டுவரும் எமது கட்சிக்கு மக்களாகிய நீங்கள் இன்றுவரை அதிகளவான அரசியல் பலத்தை வழங்காதுள்ளமைதான் வேதனையானது. இவ்வாறான ஒரு நிலையால் தான் உங்களுடைய அபிவிருத்தியும் வாழ்வியல் முன்னேற்றமும் பின்நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் இனிவரும் காலங்களிலாவது உங்களுடைய தெரிவுகள் சரியானதாக அமையும் பட்சத்தில் அதனூடாக உங்களுடைய கிராமமும் பிள்ளைகளும், நீங்களும் வளர்ச்சியடைய நாம் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் உழைக்க தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.
இதனிடையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளரும் குறித்த பிரதேச சபை உறுப்பினருமான இராமநாதன் ஐங்கரன் அவர்களால் குறித்த நிகழ்வுகளுக்கான பரிசுப் பொருட்கள் அவருடைய சபைக் கொடுப்பனவு நிதியிலிருந்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|