சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் – திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்து!

சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் B. H. N. ஜயவிக்ரம அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் கூட்டம் (22) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதேச செயலக ரீதியாக சிறுவர்களது நலன்கள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும்.சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படல் தொடர்பான சம்பவங்கள் மாவட்டத்தில் பதிவாகின்றன.இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படல் கட்டாயமானதாகும் எனவும் குறிப்பிட்டார்.
சிறுவர்கள் வாழ்வதற்குரிய நல்ல ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இதன் மூலம் அவர்களை நல்ல பிரஜைகளாக மாற்றியமைக்க முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். நீண்டகால, குறுங்கால திட்டங்களை வடிவமைத்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்க அதிபர் இதன் போது மேலும் வலியுறுத்தினார்.
திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிட்ட 430 மாணவர்கள் காணப்படுகின்றனர். இவர்களை மீளப் பாடசாலைகளில் இணைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|