சிறுவனைக் கட்டி வைத்து தீ மூட்டிய வளர்ப்புத் தந்தை: யாழ்ப்பாணத்தில் பதறவைக்கும் சம்பவம்!

இரண்டு கால்களிலும் எரிகாயங்களுடன் 10 வயதுச் சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுவனது வளர்ப்புத் தந்தையே கட்டி வைத்து காலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஊறணியில் சிறுவர் உரிமையை மீறும் வகையிலான குறித்த மோசமான சம்பவம் இடம்பெற்றது. சிறுவனின் தந்தை உயிரிழந்து விட்டார். தற்போது சிறிய தந்தையார் என்று சிறுவன் ஒருவரை அடையாளப்படுத்திக்கூறி அவரே தனது காலைக் கட்டிவைத்து மண்ணெண்ணெய் ஊற்றி கால்களில் தீ மூட்டினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிறுவன் பணம் எடுத்ததால் தந்தையார் என்று கூறப்படும் நபர் இவ்வாறு துன்புறுத்தினார் என்றும் வெளியே யாருக்காவது கூறவேண்டாம் என அச்சுறுத்தியிருந்தார் என்றும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
தீ வைத்த தினத்திலிருந்து நான்கு நாள்கள்வரை சிறுவனை மருத்துவமனையில் சேர்க்காமல் வீட்டில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எனினும் தீப்பட்ட இடம் காயமாகி மோசமான நிலைக்குச் சென்றதால் ஊறணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு மருத்துவமனைப் பொலிஸாரின் செயற்றிறன் குறைவாக் காணப்பட்டதால் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொலிஸார் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. அது தொடர்பில் சிறுவர் விடயங்களைக் கையாளும் திணைக்கள அதிகாரிக்கும் காங்கேசன்துறை பிரிவு இரண்டின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.கே. பிரியந்தவுக்கும் அறிவிக்கப்பட்டது.
அவரது வழிப்படுத்தலில் பருத்தித்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார். வல்வெட்டித்துறைப் பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
Related posts:
|
|