சிறுமி சிகிச்சை பெற்றுவந்த போது வாக்கு மூலம் பெறப்படவில்லை – அதிகாரிகள் எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிப்பு!

Monday, July 26th, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை 35 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன விசாரணை தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறுமி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்ததான ஆரம்ப தகவல்களுக்கு அமைவாக விசாரணைகளை ஆரம்பித்து சம்பவம் தொடர்பில் சிறுமியிடம் வாக்கு மூலத்தை பதிவுசெய்வதற்கு ஆரம்ப முதலே முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட சிறுமியிடமிருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்யக்கூடிய பொருத்தமான சுகாதார நிலைமையில் சிறுமி இருக்காததினால் வாக்கு மூலத்தை பதிவு செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக வாக்கு மூலத்தை பதிவு செய்ய சென்ற அனைத்து அதிகாரிகளும் இதனை அறிக்கை மூலம் சமர்ப்பித்திருப்பதாக அந்த அறிக்கையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த சிறுமியை பணிக்காக அழைத்துவந்த தரகரின் வங்கிக் கணக்குகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை அழைத்துவந்த முகவர் ஆகியோர் விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வழக்கு தடையப்பொருட்களையும் பொலிசார் பொறுப் பேற்றுள்ளனர்.

ஏற்கனவே ,இங்கு பணிக்கமர்ப்பத்தப்பட்டிருந்த மற்றுமொரு யுவதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போன்று இதுதொடர்பில் சுமார் 35 வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் விசாரணைக்குழுவினரால் வாக்கு மூலங்கள் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: