“சிமாட் போல்” ஒப்பந்தத்தில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் பாரிய மோசடி – ஆணையாளரின் அனுதியின்றி பெருந்தொகை நிதி பெற்றமையும் அம்பலம்!

Tuesday, February 16th, 2021

யாழ் மாநகர சபையினால் “சிமாட் போல் கம்பம்” அமைக்கப்பட்ட விடயத்தில் குறித்த நிறுவனத்துடன் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் தன்னிச்சையாக யாழ் மாநகரின் சம்மதமின்றி உடன்படிக்கை செய்துகொண்டு பெருந்தொகை நிதி பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது சபையில் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. 

இந்நிலையில் யாழ் மாநகரசபையினால் “சிமாட் போல் கம்பம்” அமைக்கப்பட்ட விவகாரம் மீண்டும் பூதாகரமாக உருவெடுத்திருந்த நிலையில் அத்திட்டத்தை முன்னெடுத்த நிறுவனத்துடன் நிதி கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலான அன்றைய முதல்வர் ஆர்னோல்ட் தன்னிச்சையாக ஒப்பந்தம் செய்து பெருந்தொகையான நிதியை பெற்றுள்ளார் என்பது இன்றையதினம் சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த நிதியை பெற்ற அன்றைய முதல்வர் ஆர்னோல்ட் அதிலொருபகுதி நிதியை முதற்கட்டமாக பெற்று சபையின் அனுமதியின்றி சபையின் வங்கிக் கணக்கில் வைப்பிட்டுள்ளதாகவும் அந்த உடன்படிக்கையில் தான் கையொப்பமிடவில்லை என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்யுள்ளார்.

முன்பதாக சிமாட் போல் கம்பங்களில் 5G பொருத்தப்படவுள்ளதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. இந்நிலையில் சிமாட் போல் கம்பங்கள் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடிபி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களும் இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்போது “யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, சிமாட் போல் கம்பங்கள் அமைக்கும் பணியில் மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுகின்றார் என மக்களால் சுட்டிக்காட்டப்பட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் வந்து சந்திக்க ஆர்னோல்ட் மறுத்து விரும்பினால் ஐந்து பேர் மட்டும் அலுவலகத்திற்குள் வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறியமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: