சினிமா அரங்குகளில் மது விற்பனைக்கு தடை – அமைச்சரவைப்பத்திரம் ஏற்பு!

Sunday, May 12th, 2019

எதிர்வரும் காலங்களில் சினிமா அரங்குகளில் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களுக்கு பரிந்துரைக்கடிதம் வழங்கப்படுவதை இடைநிறுத்த தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக வீடமைப்பு, கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்த அமைச்சரவைப்பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஆரம்ப காலங்களில் சினிமா மண்டபங்களில் மதுபானம் விற்பனை செய்யும் நிலையங்களை அமைப்பதில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தலையீடு செய்யவில்லை.

பிந்திய காலப்பகுதியில் திரையரங்குகளில் மதுபான விற்பனை நிலையங்களை அமைக்க இந்தக் கூட்டுத்தாபனத்தின் பரிந்துரைக்கடிதமொன்றை கலால் திணைக்களம் எதிர்பார்க்கின்றது.

திரையரங்குகளில் மதுபான விற்பனை நிலையங்களை அமைப்பதன் மூலம் சினிமா ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்த போதிலும் மதுபானம் மற்றும் சிகரட் போன்றவற்றால் சிரமங்களுக்கு உள்ளாகுவதுடன் இதனால் திரையரங்குகளுக்கு வருகை தரும் ரசிகைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டது.

இதற்கமைவாக சினிமாக்கலாசாரத்தை உருவாக்கும் நடவடிக்கையாகவும் போதைப்பொருள் அற்ற நாடொன்றை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களுக்குப் பங்களிப்புச் செய்யும் வகையிலும் எதிர்காலத்தில் பரிந்துரையை நிறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: