சாவகச்சேரி மருத்துவமனைக்கு சட்ட மருத்துவ அதிகாரி நியமிக்கப்படவில்லை!

சாவகச்சேரி மருத்துவமனையில் பணியாற்றிய சட்ட மருத்துவ அதிகாரி தென்னிலங்கைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதால் பிரதேச மக்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்கும் சட்ட மருத்துவ அறிக்கைக்கும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரியை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த இரண்டு வருடங்களாக சட்ட மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய மருத்துவர் உயர்கல்விக்காக கடந்த 27 ஆம் திகதி கொழும்பு சென்றுள்ளார்.
இந்த நிலையில் திடீரென இந்த மருத்துவர் இடமாற்றம் பெற்றுச் சென்றதால் பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் திடீர் மரணம் தொடர்பான விசாரணை மேற்கொண்டு சடலங்களை உடனுக்குடன் ஒப்படைக்கவும் விபத்து தொடர்பான அறிக்கை வழங்கலுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பிரதேசத்தில் திடீர் மரணம் ஏற்படும் வேளைகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி வரும்வரை காத்திருக்க வேண்டிய நிலையும் விபத்துக்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களால் காயமடைந்து விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவரும் நோயாளிகளுக்கு சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை பெறவும் நோயாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதனிடையே குறித்தபிரச்சினைக்கான தீர்வு புதிய அணியினர் வெளியேறிய பின்னரே குறித்த வெற்றிடத்தை நிரப்ப முடியும். அதற்குச் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|