சாதாரணப் பரீட்சை நாளை ஆரம்பம்!

Monday, December 11th, 2017

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.பழைய, புதிய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிப்பது அவசியமாகும்.வெளிநாட்டுக் கடவுச்சீட்டையும் பயன்படுத்தலாம்.பரீட்சைக்கு முன்னர் கையொப்பங்களையும் பாடங்களையும் பரீட்சிப்பது அவசியமாகும்.

மாற்றங்கள் இருக்குமாயின் பரீட்சைகள் திணைக்களத்தோடு தொடர்பு கொள்ளலாம்.பரீட்சார்த்திகள் கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம், இலத்திரனியல் உபகரணங்கள் என்பனவற்றின் மூலம் மோசடிகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசேட கவனம் செலுத்தப்பட இருக்கின்றது.

பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவோருக்கு ஐந்து வருடங்களுக்கு பரீட்சைக்குத் தோற்ற தடை விதிக்கப்படும்.அவர்களின் பெறுபேறுகளும் ரத்துச் செய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் வெளித்தரப்பினரால் பரீட்சார்த்திகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் பற்றி பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யலாம். பரீட்சை மண்டபம் அமைந்துள்ள வளாகத்திற்குள் அங்கீகாரம் பெற்றவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள்.கட்டிட நிர்மாணப் பணிகள், பிரத்தியேக வகுப்புக்கள், விளையாட்டுக்கள், நிகழ்வுகள் என்பனவும் ரத்துச் செய்யப்படுவது அவசியமாகும்.

பரீட்சை மண்டபத்திற்குள் மோசடி செய்பவர்கள் பற்றி திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யலாம். பரீட்சைகள் திணைக்களத்தின் உதவி தேவைப்படுவோர் 011 31 88 350, 011 27 84 537, 0112 78 42 08 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம். பரீட்சைகள் திணைக்களத்தின் உடனடித் தொடர்பிலக்கமான 1911 என்ற இலக்கத்தையும் தொடர்பு கொள்ள முடியும்.

Related posts: