சவுதிப் பெண்களுக்கு மேலும் ஒரு சலுகை!

Wednesday, February 21st, 2018

சவுதி அரேபியாவில் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை என அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவி ஏற்றதில் இருந்து அங்கு பல சமூக நல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். விஸன்- 2030 என்ற மறுசீரமைப்பு திட்டத்தில் பெண்களின் பங்கை மூன்றில் 2 பங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து பல்லாண்டுகளாக பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. பெண்கள் உதைபந்துப் போட்டிகளை நேரில் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் பெண்கள் தொழில் தொடங்க ஆண் பாதுகாவலர் அனுமதி பெற வேண்டும். அதாவது கணவர், தந்தை அல்லது சகோதரன் அனுமதிக் கடிதத்தை விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.

தற்போது பெண்கள் தொழில் தொடங்க இத்தகைய அனுமதிக் கடிதம் தேவையில்லை. பெண்கள் சுயமாக தொழில் தொடங்க எந்தத் தடையும் இல்லை என சவுதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related posts: