சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!

Friday, December 10th, 2021

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். இந்நிலையில் உலகெங்கும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் குறித்த தினத்தைமுன்னிட்டு பல நிகழ்வுகள் முன்னெடக்கப்பட்டுள்ளன.

முன்பதாக 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால், டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, 1950 முதல், டிசம்பர் 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு தனி மனிதனும், தான் வாழ்வதற்கான உரிமையைப் பெறுவதும், ஏனைய மனிதரை வாழவிடும் நெறிமுறையை உணர்த்துவதே இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.

அனைவரும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்பதை இந்தப் பிரகடனம் வலியுறுத்துகிறது.

இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி, ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தை இந்த நாள் உணர்த்துகின்றது.

இதேவேளை 1955 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடனத்தை இலங்கை ஏற்றுக்கொண்டது.

அந்தவகையில் ”சமத்துவம் – சமத்துவமின்மையைக் குறைக்கிறது” மனித உரிமைகளை முன்னேற்றுகிறது’ என்பது இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளாகும்.

இதேவேளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 16 நாட்கள் உலகளாவிய பிரசாரம், சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றுடன் நிறைவடைகிறது. வருடாந்தம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இந்தப் பிரசாரம் ஆரம்பிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, சர்வதேச ரீதியில், பெண் உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: