சர்வதேச சட்டங்களின்படி இலங்கையின் படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022

இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவதற்கு பிரித்தானியா அதீத முயற்சிகளை மேற்கொண்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற, தெரிவு செய்யப்பட்ட படை அதிகாரிகளின் நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கம் வகிக்கும் மற்றும் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழுவின் தலைமை நாடாக செயற்படும் பிரித்தானியாவின் இந்த முயற்சி குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –  

ஜெனீவாவில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பமாகவுள்ள 49 ஆவது மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையின் விடயம் முக்கியமானதாக இருக்கும்.

வன்னியில் 2009 ஆம் ஆண்டு புலிகளை இலங்கைப் படையினர் சுற்றிவளைத்த போது பல தகவல்களை, அப்போது இலங்கையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேனல் என்டனி காஸ் சேகரித்தார்.

எனினும் போர்க்குற்றச்சாட்டுக்களின் போது பிரித்தானியா தமது சொந்த பணியாளரின் தகவல்களையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளதா?.

அத்துடன் இலங்கையின் பொறுப்புகூறல் விடயங்களில் அதிக அக்கறை கொண்டுள்ள பிரித்தானியர்களுக்கு அவர்களின் சொந்த பணியாளர்கள் அனுப்பிய தகவல்கள் உதவியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச சட்டங்களின்படி இலங்கையின் படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: