சர்வதேச அரங்கில் முகங்கொடுத்துவருகின்ற நியாயமற்ற அழுத்தங்களை எதிர்கொள்ள இலங்கைக்கு உறுதியாக ஒத்துழைப்பு வழங்குவோம் – சீன ஜனாதிபதி உறுதி!
Tuesday, March 30th, 2021இலங்கையின் அபிவிருத்திகளுக்கு தொடர்ந்தும் உதவுவதாக உறுதியளித்துள்ள சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், சர்வதேச அரங்கில் இலங்கை முகங்கொடுத்துவருகின்ற நியாயமற்ற அழுத்தங்களின் முன்னிலையில் தொடர்ந்தும் உறுதியாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து சீனாவின் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, அண்மையில் நிறைவடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 46 ஆவது நிகழ்வில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் மற்றும் சீன அரசாங்கத்திற்கும் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்திருந்ததுடன் 6 இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியதற்காகவும் ஜனாதிபதி நன்றி தெரிவித்திருந்தார்.
அத்துடன் குறித்த உரையாடலின்போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்தி செய்யப்படுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்யுமாறும் சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேநேரம் எஞ்சிய தனது நான்கு வருட பதவிக்காலத்தில் இலங்கையின் சுபீட்சத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை செயற்படுத்துவது தனது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டபஜ ராஜபக்ச நாட்டில் “வறுமையை ஒழிப்பது தனது பிரதான நோக்கமாகுமென்றும் அதற்காக எமக்கு சீனாவை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக உதவி செய்ய தமது விருப்பத்தை தெரிவித்த சீன ஜனாதிபதி, தாம் 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் தமது நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சீனா மக்கள் வங்கியினால் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கிய பரிமாற்று நிதி வசதிகளை பாராட்டிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, அது இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு பங்களிப்பு செய்யும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கை சீன நட்பின் அடையாளமாக ஹம்பாந்தோட்டை தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை ஸ்தாபிப்பதற்கு சீனாவின் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீன கம்னியுஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு தமது வாழ்த்துக்களை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு தெரிவித்த சீன ஜனாதிபதி, கொவிட் 19 பாரிய சவாலாக அமைந்தாலும் கூட சீன – இலங்கை தொடர்புகளை புது பரிமாணத்துடன் மேம்படுத்துவதற்கு காரணமாகியதென்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|