சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க தவறிவிட்டால் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அசாதாரண மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது – மீண்டும் எச்சரிக்கிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Thursday, October 29th, 2020

உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கத் தவறியது நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமைக்கு முக்கிய காரணம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே குற்றம்சாட்டியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பை பொறுத்தவரையில் அது தாமதமான எதிர்வினைகளை விட மேலதிக எதிர்வினை சிறந்தது என்று கூறிவருகிறது.

ஆனால் இந்த தொற்று சூழ்நிலையில் இலங்கையில் எப்போதும் தாமதமான எதிர்வினைகளையே காணமுடிகிறது என்று அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார். நாடு தற்போது சமூக பரவலின் விளிம்பில் உள்ளது.

சமூகம் பரவுவதைத் தடுக்க தற்போதைய சூழ்நிலையை நிர்வகிப்பது தற்போது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அறிகுறியற்ற வகையிலேயே தற்போது கொரோனா மிக வேகமாக பரவுகிறது.

இது கடுமையாகத் தாக்கும்போது, நோயாளிகளுக்கு அதிதீவிர சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. எனவே ஒரே நேரத்தில் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

இந்தநிலையில் சமூகப் பரவல் தடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமடையக்கூடும் என்று ஹரித்த அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த சூழ்நிலையிலும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க தவறிவிட்டால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அசாதாரண மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் ஹரித்த அலுக்கே எச்சரித்துள்ளார்

Related posts: