சம்பூர் மக்களின் உணர்வுகள் மதிப்பளிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கப்படுவதால் அங்கு ஏற்படக்கூடிய சுகாதாரம் மற்றும் சூழலியலின் சாதக பாதகங்களை ஆராய வேண்டியது அவசியமாகும் என்பதே எமது நிலைப்பாடாகும். இது தொடர்பாக சம்பூர் மக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கப்படுவது மிகமுக்கியமானதுமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
குறித்த பிரதேசத்தில் வாழும் தமக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடும் என்றும், கடத்தொழில், விவசாயம் பாதிக்கப்படும் என்றும், நோய்த் தொற்றுக்கள் ஏற்படும் என்றும் சம்பூர் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த அச்சங்களையும் சந்தேகங்களையும் இலங்கை, இந்திய அரசுகள் கவனத்தில் கொண்டு செயற்படுவது அவசியமாகும்.
திருகோணமலை – சம்பூர் மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் தவறான தகவல்களின் அடிப்படையை வைத்துக்கொண்டோ, அதிகாரத்தோரணையுடனோ முடிவுகளை எடுப்பது பொருத்தமானதாக இருக்காது.
சம்பூர் மக்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், புதிய அரசுடன் நெருக்கமாகவும், இணக்கமான எதிர்க்கட்சியாகவும் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பதிலளிக்க வேண்டும்.
தேர்தல்களின்போது தமிழ் மக்களின் தன்மானத்தைக் கேள்விக்குட்படுத்தி வாக்குகளைப் பெறுகின்றவர்கள் வாக்களித்த மக்கள் கேள்விகளைக் கேட்கும்போது அதற்கு உரிய பதிலை வழங்காமல் ஓடி ஒழிப்பதும் அவர்களோடு பேசுவோம் இவர்களோடு பேசுவோம் என்று பிரச்சினையைத் திசைதிருப்பிக்கொண்டிருப்பது மக்களது நிம்மதியான வாழ்வியலுக்கு வழிவகுக்காது என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|