சம்பந்தன் கூறிவருவது அனைத்தும் பச்சைப் பொய் என்கிறார் கஜேந்திரகுமார்!

Friday, January 6th, 2017

கடந்த கால யுத்தம் முடிவடைந்த பின்னர் சம்பந்தன் தற்போது வரை தொடர்ச்சியாகத் தெரிவித்து வரும் அனைத்துக் கருத்துக்களும் உண்மைக்குப் புறம்பானவையாகவே காணப்படுகின்றன.  புதிய அரசியல் அமைப்பின் ஊடாகத் தேசியப் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை இந்த வருடம் அடைய முடியும் எனச் சம்பந்தன் கூறுவது பச்சைப் பொய். தமிழ்மக்களுக்கு அவர் கூறுவது போன்று எந்தவொரு தீர்வுகளும் கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

புதிய அரசியல் அமைப்பின் ஊடாகத் தேசிய இனப் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை அடைய முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கும் கருத்துத் தொடர்பில் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும், 13 ஆவது திருத்தச் சட்டத்தைத் தீர்வாக ஏற்றுக் கொள்ள வேண்டும்,  தமிழ் அரசியலில் தேசிய சிந்தனைகளை நீக்க வேண்டும் போன்ற விடயங்களைக் கூட்டமைப்பின் தலைவர் எங்களிடம் கேட்டுக் கொண்டதற்கமைவாகவே கடந்த-2010 ஆம் ஆண்டில் நாங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினோம்.

கடந்த வாரம் வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமற் போனோரின் உறவுகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் போராட்டத்தின் இறுதியில் சம்பந்தனின் படத்தைத் தீயிட்டு எரித்த சம்பவமானது சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ்மக்கள் கொண்டிருக்கும்  கடுமையான நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவுள்ளது.

அவரது படத்தை எமது மக்கள் எரித்த இத்தகைய சம்பவமானது சாதாரணமானதொரு விடயமல்ல.

சம்பந்தன் தமிழர்களது தீர்வு விடயத்தில் நேர்மையாகச் செயற்பட  வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அவர் எமது மக்களுக்குத் தமது  உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

எம் மக்கள் இதுவரை காலமும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை நம்பி ஏமாற்றப்பட்டிருக்கிற நிலையில் அந்த ஏமாற்றம் தொடர்கதையாவதை இனியும் அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் எனவும் எச்சரித்தார்.

kaja

Related posts: