சமூக பொறுப்புடன் பொதுமக்கள் செயற்படவேண்டும் – யாழ் மாவட்ட மக்களிடம் அரச அதிபர் கோரிக்கை!

Monday, October 5th, 2020

கொரோனா தொற்று நிலைமையினை உணர்ந்து சமூக பொறுப்புடன் பொதுமக்கள் செயற்படவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதுள்ள கொரோனா நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மேற்கண்டவாறு தெரிவிதுள்ளார்.

நேற்றைய தினம் மினுவாங்கொடை பகுதியில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கும் அவருடைய மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சமூகதொற்றாக இனங்காணப்பட்டுள்ளது.

ஆகவே அந்த வகையில் அவருடன் நெருங்கிப் பழகி பணியாற்றிய நூற்றுக்கணக்கானோர் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

அதே போன்று அந்த 400 பேருடைய பெயர் பட்டியலில் 7 பேர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டிருந்தார்கள். அவர்கள் 7 பேரும் அந்த பகுதியிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனைவிட புங்குடுதீவை சேர்ந்த 2 பேர் ஊருக்கு வந்து சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து சுகாதாரப் பிரிவினர் அந்த நிலைமையை ஆராய்ந்து அந்த குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்குள்ளப்பட்டிருக்கிறார்கள்.

முன்பதாக கடந்தவாரம் மருதங்கேணியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இந்திய மீனவர்களுடன் தொடர்பு பேணியதன் அடிப்படையிலே அவர்களும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதேபோன்று மன்னார் பகுதியிலும் இந்திய மீனவர்களுடன் தொடர்பு பேணிய 30 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே இந்த நிலைமையானது மீண்டும் இரண்டாவது அலை கொரோனா தொற்று ஏற்படுவதற்குரிய அறிகுறியாக கொள்ளப்படுகின்றது. இது இவ்வளவு காலமும் சமூகத்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலைமையை மீறியதாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் சுகாதார நடைமுறைகள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன உதாரணமாக அலுவலகங்கள், வியாபார நிலையங்கள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேருந்துகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் போன்ற பல்வேறுபட்ட வழிகாட்டல்கள் மற்றும் சுகாதார நடைமுறைகள் ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

ஆகவே இந்த சூழ்நிலையில் அந்த சுகாதார நடைமுறைகளை மற்றும் சமூக இடைவெளிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இந்த நிலையில் மிகவும் விழிப்பாக இருந்து ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் சுய பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி மக்கள் செயற்பட வேண்டிய ஒரு கட்டாய காலமாக இந்த காலம் காணப்படுகின்றது.

ஆகவே இது நமக்கு வராது என்று ஒரு அலட்சிய மனப்பாங்குடன் இருக்காது எங்களுக்கும் எந்த நேரமும் வரலாம் என்ற ஒரு மனப்பாங்கோடு இந்த கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முன் வரவேண்டும் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: