சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – தவறான பரப்புரை என அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

Monday, December 21st, 2020

சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மையான அர்த்தத்தை தெரிவிக்கால் மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

முன்பதாக ஊடக சந்திப்பொன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது கருத்துக்களை தெளிவுபடுத்தி இன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைச்சர், சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

இந்த டிஜிட்டல் பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை பெரிதும் பதிப்பதாகவும் இது நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பரிசீலனைகள் இடம்பெறுவதாகவும் இதன்போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெரும் தொகை பணம் வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: