சமூகம் தற்போது எமது தொழிலாளர்களை பார்க்கும் விதம் நரக வேதனையை தருகின்றது – பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரி கவலை!

Monday, October 19th, 2020

பிரான்டிக்ஸ் நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறித்து வேதனையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மினுவாங்கொட ஆடைதொழிற்சாலை தொழிலாளா ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்த தனது தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றமை தன்னை காயப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள பிரன்டிக்ஸ் நிறுவனம் தற்போதைய நெருக்கடியை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சமூகத்தை ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் நிதி இயக்குநர் ஹசித பிரேமரட்ண பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் மினுவாங்கொட தொழிற்சாலையில் முதலாவது நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதுமுதல் நிறுவனத்தின் ஊழியர்கள் சமூகத்தின் எதிர்ப்பினை சந்தித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எங்களது தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று கல்வீச்சிற்கு தாக்குதலுக்கு உள்ளாகியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரன்டிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தங்கள் தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கு நிவாரணபொருட்களை வழங்குவதற்காக சில கிராமங்களுக்கு செல்ல முயன்ற வேளை அவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே பேருந்துகளும் முச்சக்கரவண்டிகளும் தங்கள் தொழிலாளர்களை ஏற்றுவதற்கு மறுக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ள அவர் சமூகம் தற்போது எங்கள் தொழிலாளர்களை பார்க்கும் விதம் காரணமாக எங்கள் தொழிலாளர்கள் நரக வேதனையை அனுபவிக்கின்றனர் எனவும் நிறுவனத்தின் நிதி இயக்குநர் ஹசித பிரேமரட்ண குறிப்பிட்டுள்ளார்.

இது எங்களை மிகவும் காயப்படுத்துகின்றது. சாதாரண பெண் தொழிலாளியால் என்ன செய்ய முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூகம் எங்களை இவ்வாறே நடத்துகின்றது, இது எங்களுக்கு கண்ணீரை வரவைக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இது மாறவேண்டும், அவர்கள் என்ன தவறிழைத்துள்ளனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் விசாகப்பட்டினத்திலிருந்து பிரென்டிக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த விசேட விமானத்தில் இந்தியர்கள் எவரும் வரவில்லை, இந்தியர்கள் எவரும் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலைக்கு செல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே காய்ச்சலுடன் பணியாற்றுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாக தனது தொழிற்சாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறித்து விசாரணை செய்வதற்காக சுயாதீன குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: